ஊழியர் கௌரவிப்பு மற்றும் சமூக நலன்புரி விடயங்கள் மூலம் 27 வருட சேவையைக் கொண்டாடும் SDB வங்கி
18-September-2024
SDB வங்கி தனது 27ஆவது ஆண்டு நிறைவை அண்மையில் பெருமையுடன் கொண்டாடியது. இலங்கை முழுவதும் உள்ள தனது ஊழியர்கள் மற்றும் சமூகங்கள் தொடர்பில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை அது முன்னெடுத்திருந்தது. SDB வங்கி 1997 இல் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அது கொண்டுள்ள முக்கிய மதிப்புகளையும் பணிநோக்கையும் உள்ளடக்கிய சமூகப் பொறுப்பு, நிலைபேறான தன்மை, ஊழியர்களை அங்கீகரித்து கௌரவித்தல் உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தி ஒரு வார கால கொண்டாட்டத்தை முன்னெடுத்ததன் மூலம் வங்கி அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.
இந்த முக்கியமான மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், SDB வங்கி மூன்று முக்கிய திட்டங்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தது. அந்த வகையில் அதில் முதலாவதாக, வங்கியில் 25 வருட சேவையை நிறைவு செய்து தம்மை அர்ப்பணித்த ஊழியர்களை கௌரவிக்கும் விசேட விழாவை முன்னெடுத்திருந்தது. நீண்ட காலமாக சேவையாற்றி, வங்கியின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கான அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டி இந்த ஊழியர்களுக்கு தங்க நாணயங்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், SDB வங்கியின் நிறுவன முகாமைத்துவம் மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து, கிருலப்பனை குமார உதயம் தமிழ்ப் பாடசாலையின் புனரமைப்புத் திட்டம் மற்றும் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு பயனளிக்கும் வகையிலான இரத்த தான முகாம் உள்ளிட்ட இரண்டு முக்கிய திட்டங்களை முன்னெடுத்திருந்தன. ஊழியர்களையும் சமூகங்களையும் ஒன்றிணைத்த இந்த திட்டங்கள், தாம் அடைந்த பலன்களிலிருந்து அர்த்தமுள்ள வழிகளில் சமூகத்திற்கு பிரதிபலனை வழங்கும் வங்கியின் நடைமுறையை எடுத்துக் காட்டுகின்றன. கிருலப்பனை குமார உதயம் தமிழ்ப் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட புனரமைப்பு நடவடிக்கையானது, மாணவர்களுக்கு மிகவும் உகந்த கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அடுத்த தலைமுறையினருக்கு தரமான கல்வி வளங்களை அணுகுவதை உறுதி செய்து, அவர்களை மேம்படுத்துவது தொடர்பான SDB வங்கியின் அர்ப்பணிப்பை காண்பிக்கிறது.
சிறு, நடுத்தர தொழில்முயற்சியாளர் (SME) துறையை மேம்படுத்துவதில் முதன்மையாக விளங்கும் அபிவிருத்தி வங்கி எனும் வகையில், SDB வங்கி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து, பலதரப்பட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவை செய்யும் ஒரு வலுவான நிதி நிறுவனமாக பரிணமித்துள்ளது. இலங்கை முழுவதும் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் வங்கி முக்கிய பங்காற்றியுள்ளது. குறிப்பாக பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதில் முக்கியத்துவம் அளித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. SDB வங்கியானது, இலங்கையின் வங்கித் துறையில் சூழல், சமூகம், ஆளுகை (Environmental, Social, Governance-ESG) தொடர்பான நிலைபேறான விடயங்களில் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது. மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, நிலைபேறான விவசாயம், டிஜிட்டலை உள்ளீர்த்தல் போன்ற பல்வேறு நிலைபேறான தன்மை திட்டங்களை வங்கி முன்னெடுத்து வருகிறது. டிஜிட்டல் வங்கியை பிரபலப்படுத்துவதில் கவனம் செலுத்துதல், வங்கிச் சேவையை மிகவும் வசதியாகவும், பரந்த வாடிக்கையாளர்கள் அணுகக்கூடியதாகவும் மாற்றுதல் போன்ற விடயங்கள் மூலம் நிதி உள்ளீர்த்தலை அதிகரிக்கும் வங்கியின் நோக்கம் ஆதரிக்கப்படுகின்றது.
SDB வங்கி இந்த முக்கிய மைல்கல்லைக் கொண்டாடும் இவ்வேளையில், நாடு முழுவதும் உள்ள அதன் 94 கிளைகளின் வலையமைப்பின் மூலம் அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பான அதன் நோக்கத்தில் அது உறுதியாக இருந்து வருகின்றது. வங்கியின் 27ஆவது வருட நிறைவுக் கொண்டாட்டங்கள், அதன் வளமான வரலாற்றை பெருமைப்படுத்துவதோடு, சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் எதிர்கால முயற்சிகளுக்கு களம் அமைக்கிறது.

SDB வங்கியின் 27ஆவது வருட விழா நிகழ்வுகளின் போது...